பெரிய சூரியூரில் ரூ.3 கோடி ஜல்லிக்கட்டு மைதானம் – பொங்கல் அன்று உதயநிதி ஸ்டாலின் திறப்பு
Jallikattu#Pongal#Periyasuriyur#Trichy
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூர் கிராமத்தில், ஆண்டுதோறும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் மாட்டு பொங்கல் அன்று ஸ்ரீ நற்கடல்குடி கருப்பணசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டி திருச்சி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் முதல் ஜல்லிக்கட்டு என்பதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிகளவில் காளைகள் மற்றும் வீரர்கள் பங்கேற்பார்கள். இதனால் பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டி மாநில அளவில் பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சூரியூரில் ரூ.3 கோடி செலவில் பிரமாண்டமான ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானம் ஜல்லிக்கட்டு போட்டிகள் மட்டுமின்றி, கால்பந்து, வாலிபால் உள்ளிட்ட பிற விளையாட்டுகளையும் நடத்தும் வகையில் பல்நோக்கு மைதானமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு மைதானத்தின் வாடிவாசலுக்கு இருபுறங்களிலும் பார்வையாளர்கள் அமர்வதற்காக கேலரி அமைக்கப்பட்டுள்ளது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 2வது பெரிய ஜல்லிக்கட்டு மைதானமாக இந்த மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த பிரமாண்ட ஜல்லிக்கட்டு மைதானத்தை வரும் பொங்கல் திருநாளான 15-ம் தேதி மாலை தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மேலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதற்கான முகூர்த்தக்கால் நடப்பட்டு அதனுடன் தொடர்புடைய பணிகளும் தொடங்கியுள்ளன. பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெற உள்ள இந்த ஜல்லிக்கட்டு விழா பாரம்பரிய விளையாட்டுகளை கொண்டாடும் முக்கிய நிகழ்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0