சமத்துவத்தின் பாதையில் வைகோ திருச்சியில் ஒற்றுமை முழங்க, இரண்டாம் நாளில் 14 கி.மீ. நடைப்பயணம்

Jan 5, 2026 - 00:39
Jan 5, 2026 - 00:47
 0  9
சமத்துவத்தின் பாதையில் வைகோ திருச்சியில் ஒற்றுமை முழங்க, இரண்டாம் நாளில் 14 கி.மீ. நடைப்பயணம்

திருச்சி 

போதைப் பொருள் ஒழிப்பு, சமூக சமத்துவம், மீண்டும் திமுக ஆட்சி ஆகிய கோட்பாடுகளை வலியுறுத்தி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மேற்கொண்டு வரும் ‘சமத்துவ நடைப்பயணம்’ இரண்டாம் நாளில் திருச்சி பஞ்சப்பூரிலிருந்து சனிக்கிழமை காலை தொடங்கியது. இந்த நடைப்பயணத்தில் வைகோவுடன் சுமார் 600-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்றனர்.

திருச்சியிலிருந்து மதுரை வரை ஜனவரி 2 முதல் 12 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நடைப்பயணத்தை, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திருச்சியில் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தார். முதல்நாளில் தென்னூர் முதல் பஞ்சப்பூர் வரை மாநகரப் பகுதிகளில் சுமார் 13 கி.மீ. தொலைவு நடைப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார் வைகோ.

ஆன்மிக ஒற்றுமை வெளிப்பாடு

முதல் நாள் இரவு பஞ்சப்பூரில் உள்ள கிரிஸ்டல் கன்வென்ஷன் மையத்தில் ஓய்வெடுத்த நடைப்பயணக் குழு, சனிக்கிழமை காலை இரண்டாம் நாள் பயணத்தை தொடங்கியது. மணிகண்டம் ஒன்றியத்துக்குட்பட்ட செங்குறிச்சி பிரிவுச் சாலை சந்திப்பில் இந்த நடைப்பயணத்திற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

சிவனடியார்கள் திருமுறைகள் பாட, பூரண கும்ப மரியாதை, நாகசுர வாத்திய இசை, சைவ நெறிப்படி வைகோவுக்கு பாரம்பரிய முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மதிமுக திருச்சி மாநகர், திருச்சி புறநகர் தெற்கு, திருவாரூர் தெற்கு, திருவாரூர் வடக்கு, நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் உற்சாகமாக பங்கேற்றனர்.

மத நல்லிணக்கத்தின் நடை

திருவக்குடி, வட்டப்பாறை விலக்கு, மணிகண்டம், தீரன் மாநகர், அண்ணாநகர் விலக்கு வழியாக நடைப்பயணம் நாகமங்கலத்தை சென்றடைந்தது. அங்கு இஸ்லாமியர்கள் திருக்குர்ஆன் ஓதி நடைப்பயண குழுவை வரவேற்றனர். காலை முதல் பிற்பகல் வரை 6.50 கி.மீ. நடந்த குழுவினர், நாகமங்கலத்தில் மதிய ஓய்வுக்குப் பிறகு மாலையில் மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தனர்.

பாத்திமாநகர் தேவாலயம் முன்பு கிறிஸ்தவர்கள், ஆலய பங்குத்தந்தை தலைமையில் விவிலியம் வாசித்து வைகோவை வரவேற்று வாழ்த்தி வழியனுப்பினர். இதன் மூலம் மத நல்லிணக்கம், சமத்துவம் ஆகியவை நடைப்பயணத்தின் முக்கிய செய்தியாக வெளிப்பட்டது.

மக்கள் சந்திப்பு – அரசியல் உற்சாகம்

தொடர்ந்து சக்தி நகர் விலக்கு, அளுந்தூர், பள்ளப்பட்டி விலக்கு, சூரக்குடிப்பட்டி விலக்கு, அரசு பொறியியல் கல்லூரி, பாத்திமாநகர், எரக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார் வைகோ.

இந்த நிகழ்வில் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, துணைப் பொதுச் செயலாளர்கள் ரொஹையா, மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம், டிடிசி சேரன் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இரண்டாம் நாளில் மட்டும் மொத்தமாக 14 கி.மீ. தொலைவுக்கு நடைப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. சமத்துவம், போதைப் பொருள் எதிர்ப்பு, சமூக ஒற்றுமை ஆகிய முழக்கங்களுடன் முன்னேறும் இந்த நடைப்பயணம், தமிழக அரசியலில் கவனம் ஈர்க்கும் முக்கிய நிகழ்வாக மாறியுள்ளது.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
Prabhu Sub Editor