தமிழ்நாடு காங்கிரஸ் சேவாதள மாநில துணைத் தலைவராக தஞ்சையைச் சேர்ந்த திருஞானம் நியமனம்...
தஞ்சை:தமிழ்நாடு காங்கிரஸ் சேவாதள மாநில துணைத் தலைவராக தஞ்சை மாவட்டம், ஒரத்தநாட்டைச் சேர்ந்த லயன். டாக்டர். கே. திருஞானம் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் இயக்கத்தில் நீண்ட காலமாக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் அவருக்கு கிடைத்துள்ள இந்த பொறுப்பு, கட்சி வட்டாரங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்து சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக, 1990-ஆம் ஆண்டு ஒரத்தநாடு வட்டார காங்கிரஸ் துணைத் தலைவராக நியமிக்கப்பட்ட திருஞானம், அந்தப் பொறுப்பை சிறப்பாக வகித்துள்ளார்.
1991-ஆம் ஆண்டு, அவரது திருமணம் முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழ்நாடு முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவருமான வாளப்பாடி கே. ராமமூர்த்தி தலைமையிலும், பூண்டி சீமான் துளசி அய்யா வாண்டையார் முன்னிலையிலும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
1995 முதல் 2000 ஆம் ஆண்டு வரை, இந்திய தேசிய தொழிலாளர் சம்மேளனம் (INTUC) பிரிவில் தஞ்சை மாவட்ட பொதுச் செயலாளராக பணியாற்றியுள்ளார். தொடர்ந்து, 2001-ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் சேவாதளத்தில் தன்னை இணைத்துக் கொண்டு, மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் சேவாதள பயிற்சியையும் பெற்றுள்ளார்.
சேவாதளத்தில் தொடர்ந்து பயணித்து வரும் திருஞானம், தஞ்சை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளராக 10 ஆண்டுகள்,2020 முதல் 2025 வரை தஞ்சை மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும், ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட காங்கிரஸ் சேவாதள பொறுப்பாளராகவும் மிகச் சிறப்பாக பணியாற்றியுள்ளார்.
மேலும், மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு தேர்தல் பணிகளை திறம்பட மேற்கொண்டுள்ளார். அதேபோல், கரூர் பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் களப் பணிகளிலும் முக்கிய பங்காற்றியுள்ளார்.
காங்கிரஸ் சேவாதளத்தின் 100-ஆம் ஆண்டு நினைவு பயிற்சியாக, பெங்களூரில் உள்ள என்.டி.சி. (National Training Centre)-யில் சேவாதள பயிற்சியையும் வெற்றிகரமாக முடித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், அதனை முன்னின்று நடத்தி, தன்னால் இயன்ற அளவில் செலவையும் ஏற்று செயல்படும் தன்மை கொண்டவர் எனக் கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். ஒப்படைக்கப்படும் எந்த பொறுப்பையும் செம்மையாக நிறைவேற்றும் ஆற்றல், எளிமையான அணுகுமுறை, அனைவரிடமும் அன்புடன் பழகும் பண்பு ஆகியவை அவரை அனைவருக்கும் பிடித்த தலைவராக உருவாக்கியுள்ளது.
அரசியல் மட்டுமல்லாது, சமூகப் பணிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வரும் திருஞானத்தின் இந்த நீண்ட கால சேவை, அர்ப்பணிப்பு மற்றும் செயல்திறனை கருத்தில் கொண்டு, தற்போது அவரை தமிழ்நாடு காங்கிரஸ் சேவாதள மாநில துணைத் தலைவராக நியமித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நியமனம், தஞ்சை மாவட்ட காங்கிரஸ் தொண்டர்களிடையே மகிழ்ச்சியும், புதிய உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0