சேலம் கோயிலில் வழிபாட்டுக்கு தடை: பொங்கல் வைத்தால் கொலை மிரட்டல் – பாதுகாப்பு கோரி எஸ்.பி. அலுவலகத்தில் குவிந்த கிராம மக்கள்
சேலம், ஜனவரி 9:
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே உள்ள ரங்கம்பாளையம் பகுதியில் போயர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட திருக்கோயிலில், பாரம்பரியமாக நடைபெற்று வந்த பொங்கல் வழிபாட்டுக்கு தடை விதித்து, கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக எழுந்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த திருக்கோயிலில் கடந்த பல ஆண்டுகளாக ஐந்து வகையறாவைச் சேர்ந்த மக்கள் இணைந்து பூஜை செய்து வழிபட்டு வந்துள்ளனர். ஆனால் கடந்த சில மாதங்களாக, அதே பகுதியைச் சேர்ந்த முருகன் மற்றும் அவரது சகோதரர் சரவணன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நபர்கள், கோயிலுக்குள் பொதுமக்கள் நுழைவதைத் தடுத்து, பொங்கல் வைத்து வழிபடக் கூடாது என மிரட்டல் விடுத்து வருவதாக கூறப்படுகிறது.
நான்கு வகையறாவுக்கு முழுமையான தடை
குறிப்பாக, நான்கு வகையறாவைச் சேர்ந்த மக்கள் கோயில் அருகே கூட செல்ல அனுமதிக்காமல் தடுத்து வருவதோடு, மீறி வந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் கொலை மிரட்டல் விடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
புகார்களுக்கு நடவடிக்கை இல்லை?
இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்தும், இதுவரை எந்தவிதமான சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றமும் அச்சமும் நிலவி வருகிறது.
எஸ்.பி. அலுவலகத்தில் மனு
இந்த சூழலில், இன்று அந்த பகுதியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், கோயிலில் பொங்கல் வைத்து வழிபட அனுமதி வழங்க வேண்டும்,கொலை மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது உடனடி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்,தங்களின் உயிருக்கும் உடமைக்கும் காவல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேரடியாக மனு அளித்தனர்.
மக்கள் பொதுநலக் கேள்வி
சாதி, வகையறா பேதமின்றி அனைவரும் வழிபட உரிமை கொண்டுள்ள நிலையில், ஒரு திருக்கோயிலில் வழிபாட்டுக்கு தடை விதிப்பதும், உயிர் மிரட்டல் விடுப்பதும் கடுமையான குற்றம் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த விவகாரத்தில்,
👉🏻கோயிலின் உரிமை மற்றும் வழிபாட்டு நடைமுறை
👉🏻மிரட்டல் விடுக்கும் நபர்களின் பின்னணி
👉🏻காவல் துறையின் அலட்சியமா அல்லது அழுத்தமா
என்பவை குறித்து உயர் மட்ட விசாரணை அவசியம் எனக் கூறப்படுகிறது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0