**28 ஆண்டுகளுக்குப் பின் பள்ளி நட்பு ஆசிரியர்–மாணவர் பாசத்தில் நெகிழ்ந்த வத்தலகுண்டு புனித தோமையார் நடுநிலைப் பள்ளி!**

Jan 26, 2026 - 15:45
Jan 26, 2026 - 17:05
 0  8
**28 ஆண்டுகளுக்குப் பின் பள்ளி நட்பு ஆசிரியர்–மாணவர் பாசத்தில் நெகிழ்ந்த வத்தலகுண்டு புனித தோமையார் நடுநிலைப் பள்ளி!**

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் அமைந்துள்ள புனித தோமையார் நடுநிலைப் பள்ளியில் கடந்த 28 ஆண்டுகளுக்கு முன் பயின்ற முன்னாள் மாணவ–மாணவிகள், தங்களை உருவாக்கிய ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்தவும், பள்ளி நாட்களின் இனிய நினைவுகளை மீண்டும் பகிர்ந்து கொள்ளவும் சிறப்பான சந்திப்பு விழாவை ஏற்பாடு செய்தனர்.

இந்த நிகழ்வின் முக்கிய அம்சமாக, தங்களுக்கு பாடம் கற்பித்த முன்னாள் ஆசிரியர்களை நேரில் அழைத்து கௌரவித்தது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஆசிரியர்களின் கண்டிப்பு, ஒழுக்கம், பாடங்களை எளிய முறையில் விளக்கி தேர்வுக்கு தயார் செய்த விதம் உள்ளிட்ட நினைவுகளை முன்னாள் மாணவர்கள் உணர்ச்சிப்பூர்வமாக பகிர்ந்து கொண்டனர்.

விழாவில் பங்கேற்ற முன்னாள் மாணவர்கள் பலர், தங்கள் முன்னாள் ஆசிரியர்களின் காலில் விழுந்து வணங்கி ஆசிகளைப் பெற்றனர். தொடர்ந்து ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மாணவ–மாணவிகள், ஆசிரியர்களுடன் இணைந்து ஆடல்–பாடலுடன் நடனமாடி கொண்டாடினர். அனைவரும் ஒன்றாக இணைந்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டது நிகழ்வின் சிறப்பு அம்சமாக அமைந்தது.

நிகழ்வின்போது முன்னாள் மாணவர்கள் கூறுகையில்,

“28 ஆண்டுகளுக்கு முன் எங்களுடன் ஒன்றாகப் படித்த நண்பர்களை மீண்டும் சந்தித்தது வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவிற்கு நெகிழ்ச்சியான அனுபவம். பள்ளிப் பருவம் என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் என்றும் மறக்க முடியாத பொக்கிஷம். கள்ளம்கபடமற்ற சிரிப்பும், அன்பும் நிறைந்த அந்த நாட்களை காலம் எவ்வளவு சென்றாலும் எளிதில் கடந்து விட முடியாது” என உருக்கமாக தெரிவித்தனர்.

மேலும், வாழ்க்கைச் சூழ்நிலையில் பல்வேறு இடங்களில் பணியாற்றினாலும், இத்தகைய பழைய மாணவர் சந்திப்புகள் எப்போதும் மனதில் தனித்த இடம் பெறும் என்றும், தங்களால் இயன்ற அளவிற்கு பள்ளியின் வளர்ச்சிக்குத் தேவையான உதவிகளை தொடர்ந்து செய்வதாகவும் முன்னாள் மாணவர்கள் உறுதியளித்தனர்.

இந்த விழாவில்

முன்னுரை – முகமது பிலால்

வாழ்த்துரை – முத்துக்குமரன்

நன்றி உரை – சங்கிலியம்மாள் நரேஷ் ஆகியோர் உரையாற்றினர்.

மேலும் பள்ளியின் தாளாளர் அருட் சகோதரி பீலீஸ், தலைமை ஆசிரியை அருட் சகோதரி மனோகரி, ஆசிரியைகள் ஜாஸ்மின், மேரி வீரமணி, பாத்திமா மேரி, லெனிட்டா, மெர்சி, சீலா, ரெஜினா, ஜான்சி, ஆரோக்கிய அமுதா, ஞானம்மாள், ஆண்ட்ரூஸ் உள்ளிட்டோர் மற்றும் புனித தோமையார் நடுநிலைப் பள்ளியின் முன்னாள் மாணவ–மாணவிகள் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் முன்னாள் மாணவர்கள் சார்பில் சைவம் மற்றும் அசைவ உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பாசமும், பண்பாடும், நன்றியுணர்வும் கலந்த இந்த சந்திப்பு விழா, புனித தோமையார் நடுநிலைப் பள்ளியின் பெருமையை மேலும் உயர்த்தும் வகையில் அமைந்தது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
Prabhu Sub Editor