சர்வதேச போதைப்பொருள் ஒழிப்புதினம்: 500 மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய உறையூர் காவல்துறை

Jun 25, 2026 - 22:29
Jun 25, 2026 - 22:44
 21
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்புதினம்: 500 மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய உறையூர் காவல்துறை

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்புதினத்தை முன்னிட்டு, திருச்சி மாநகர காவல்துறையின் உறையூர் காவல் நிலையம் சார்பில்  (25.06.2026) தேதியில் மாணவ, மாணவியர்களுக்கான சிறப்பு போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

உறையூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையில், உறையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட CSI மெத்தடிஸ்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இதில் பள்ளியின் 200 மாணவியர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டு, போதைப்பொருள் பயன்பாட்டின் தீமைகளை எடுத்துரைக்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பினர்.

பேரணியைத் தொடர்ந்து நடைபெற்ற விழிப்புணர்வு வகுப்பில் பேசிய உறையூர் காவல் ஆய்வாளர் திரு. பாலகிருஷ்ணன் அவர்கள், “இன்றைய மாணவ சமுதாயமே நாளைய இந்தியாவின் வலிமை. போதைப்பொருள் பழக்கம் தனிநபரின் வாழ்க்கையை மட்டுமல்ல, குடும்பத்தையும் சமூகத்தையும் சீரழிக்கக் கூடியது. மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்தி, நல்ல பழக்கவழக்கங்களை கடைப்பிடித்து, போதைப்பொருளுக்கு எதிரான தூதுவர்களாக செயல்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, பிஷப் ஹெபர் மேல்நிலைப்பள்ளியிலும் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்புதினத்தை முன்னிட்டு சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 300 மாணவர்கள் மற்றும் 10 ஆசிரியர்கள் கலந்து கொண்டு, போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் உடல், மன மற்றும் சமூக பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாணவர்கள் போதைப்பொருள் ஒழிப்பிற்கான உறுதிமொழி ஏற்று, சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் தங்களது பங்களிப்பை வழங்க உறுதியளித்தனர்.

இரு பள்ளிகளிலும் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் காவல்துறையினர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். மாணவ, மாணவியர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய இந்த நிகழ்ச்சிகள் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், போதைப்பொருள் இல்லாத பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கும் முக்கிய முயற்சியாக அமைந்தது.

போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் வலுப்படுத்தவும், சமூகப் பொறுப்புணர்வை வளர்க்கவும் உறையூர் காவல் நிலையம் மேற்கொண்ட இந்த நடவடிக்கை பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.