ஒரே பேருந்தில் மூன்று பேருந்துக்கான கூட்டம்... பள்ளி மாணவிகள், தினக்கூலி தொழிலாளர்கள் கடும் அவதி – உசிலம்பட்டி–எம்.கல்லுப்பட்டி வழித்தடத்தில் கூடுதல் பேருந்து இயக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

Jun 30, 2026 - 09:00
 15
ஒரே பேருந்தில் மூன்று பேருந்துக்கான கூட்டம்... பள்ளி மாணவிகள், தினக்கூலி தொழிலாளர்கள் கடும் அவதி – உசிலம்பட்டி–எம்.கல்லுப்பட்டி வழித்தடத்தில் கூடுதல் பேருந்து இயக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

மதுரை, ஜூன் 30

மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகாவிற்கு உட்பட்ட உசிலம்பட்டி – எம்.கல்லுப்பட்டி – எழுமலை வழித்தடத்தில் போதுமான பேருந்து வசதி இல்லாததால், பள்ளி மாணவிகள், தினக்கூலி தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் நாள்தோறும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தினமும் காலை 7.15 மணிக்கு உசிலம்பட்டியில் இருந்து புறப்பட்டு எம்.கல்லுப்பட்டி வழியாக சீல் நாயக்கன்பட்டி பேருந்து நிறுத்தத்தை வந்தடையும் அரசு டவுன் பேருந்தே அந்த நேரத்தில் முக்கிய போக்குவரத்து வசதியாக உள்ளது. இந்த பேருந்து எம்.கல்லுப்பட்டி, சூழபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை கடந்து வருவதால், அப்பகுதிகளிலேயே முழுவதுமாக நிரம்பி விடுகிறது.

இதனால், சீல் நாயக்கன்பட்டியில் இருந்து உசிலம்பட்டிக்கு தினமும் வேலைக்குச் செல்லும் 100-க்கும் மேற்பட்ட தினக்கூலி தொழிலாளர்கள் பேருந்தில் ஏற முடியாமல் தவிக்கின்றனர். அந்த பேருந்தை தவறவிட்டால் அடுத்த பேருந்து நீண்ட நேரம் இல்லாததால், அவர்கள் வேலைக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் வருமான இழப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதேபோல், உசிலம்பட்டியில் உள்ள டி.எல்.சி. பள்ளியில் கல்வி பயிலும் மாணவிகளும் இந்த ஒரே பேருந்தையே நம்பி பள்ளிக்குச் சென்று வருகின்றனர். ஆனால், அளவுக்கு மீறிய கூட்டம் காரணமாக மாணவிகளால் பாதுகாப்பாக பேருந்தில் பயணம் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. பலர் பேருந்தில் ஏற முடியாமல் அடுத்த வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுவதால், பள்ளிக்கு தாமதமாகச் செல்வதாக பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

பள்ளிக்கு தாமதமாக வரும் மாணவிகளுக்கு ஒழுங்கு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மைதானத்தை சுற்றி ஓடச் செய்வது போன்ற தண்டனைகள் வழங்கப்படுவதாகவும், இது மாணவிகளுக்கு மனஉளைச்சலையும் உடல் சோர்வையும் ஏற்படுத்துவதாகவும் பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மேலும், 7.15 மணி முதல் 8.45 மணி வரை இந்த வழித்தடத்தில் வேறு எந்த பேருந்தும் இயக்கப்படாததால், எழுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்குச் செல்லும் மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களும் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

சுமார் 25 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து உசிலம்பட்டிக்கு வேலை, கல்வி மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காகச் செல்லும் நூற்றுக்கணக்கான மக்களின் நலனை கருத்தில் கொண்டு, இந்த நேரத்தில் கூடுதல் பேருந்து அல்லது தொடர் பேருந்து இயக்கப்பட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது.

"மூன்று பேருந்துகளில் செல்ல வேண்டிய அளவிலான பயணிகள் ஒரே பேருந்தில் பயணிக்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. பெண்கள், பள்ளி மாணவிகள், மாற்றுத்திறனாளி,முதியவர்கள் என அனைவரும் கடும் நெரிசலில் உயிரைப் பணயம் வைத்து பயணம் செய்ய வேண்டிய அவலம் தொடர்கிறது. இந்த நிலையை உடனடியாக மாற்ற வேண்டும்," என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

எனவே, உசிலம்பட்டி போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் சம்பந்தப்பட்ட வழித்தடத்தில் நேரடி ஆய்வு மேற்கொண்டு, உசிலம்பட்டி – எம்.கல்லுப்பட்டி – எழுமலை வழியாக காலை நேரங்களில் கூடுதல் அரசு டவுன் பேருந்துகள் அல்லது சிறப்பு சேவைகளை இயக்குவதற்கான துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள், தினக்கூலி தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அரசுக்கும் போக்குவரத்துத் துறைக்கும் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மாணவர்களின் கல்வி, தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில், இந்த மக்கள் நலக் கோரிக்கைக்கு அதிகாரிகள் உடனடியாக செவிசாய்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.