சாக்கடை கடந்து பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள்: சீல் நாயக்கன்பட்டியில் சுகாதார சீர்கேடு – அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமா?”

Mar 11, 2026 - 21:29
Mar 12, 2026 - 21:20
 0  20
சாக்கடை கடந்து பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள்: சீல் நாயக்கன்பட்டியில் சுகாதார சீர்கேடு – அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமா?”

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா, சேடப்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட சீல் நாயக்கன்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப் பள்ளி தற்போது சுகாதார சீர்கேடும், சமூக ஒழுங்கு மீறல்களும் காரணமாக கவலைக்குரிய நிலையில் இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி கற்கும் இந்த பள்ளியின் முன்பகுதியில் நிலவும் சுகாதார சீர் கெட்ட சூழல், மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

சாக்கடை கடந்து பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள்

 பள்ளிக்கூடம் முன்பாகவே சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் மாணவர்கள் பள்ளிக்குள் செல்லும் ஒவ்வொரு நாளும் அந்த சாக்கடையை கடந்து செல்ல வேண்டிய அவல நிலை உருவாகியுள்ளது. மழை காலங்களில் நிலைமை மேலும் மோசமடைவதாகவும், துர்நாற்றம் காரணமாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடும் அவதியுறுவதாகவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

 தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட விதிமுறைகளை மீறும் புகையிலை விற்பனை

பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களின் அருகில் 100 மீட்டர் தூரத்திற்குள் பீடி, சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யக் கூடாது என்பது அரசின் தெளிவான விதிமுறையாக உள்ளது. இருப்பினும், சீல் நாயக்கன்பட்டி பள்ளி வாசல் முன்பாகவே சில கடைகளில் பீடி, சிகரெட் மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.மாணவர்கள் தினமும் இந்த சாக்கடையையும் கடந்து பள்ளிக்குச் செல்ல வேண்டிய நிலை இருப்பதால், இது அவர்களின் மனநிலைக்கும் எதிர்காலத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

பள்ளி முன்பே மது அருந்தும் சிலர் மது அருந்தி, காலியான மது பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கப்புகளை ஆங்காங்கே வீசி செல்கின்றனர் . இதனால் பள்ளி சுற்றுப்புறம் அசுத்தமாக மாறி, மாணவர்கள் செல்லும் பாதை பாதுகாப்பற்றதாக மாறியுள்ளது.

நோய் பரவும் அபாயம்

சாக்கடை நீர் தேக்கம் மற்றும் குப்பைகள் காரணமாக கொசுக்கள் பெருகும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் டெங்கு, மலேரியா போன்ற கொசு மூலம் பரவும் நோய்கள் பரவுவதற்கான அபாயம் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

இந்நிலையில், மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை, பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு பள்ளி சுற்றுப்புறங்களை சுத்தம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல், பள்ளி முன்பாக செயல்பட்டு வரும் புகையிலை விற்பனை கடைகளை அகற்றியும், அங்கு மது அருந்துவதை கட்டுப்படுத்தியும் மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழல் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.மாணவர்களின் நலன் மற்றும் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட துறைகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தின்தேவையாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

கல்வி கற்பிக்கும் இடம் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும்; அது தான் மாணவர்களின் எதிர்காலத்திற்கு அடித்தளம்” 

✍🏻 தங்கப்பாண்டியன் 

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 1
Wow Wow 0