பழனி ஆர்டிஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை...
பழனி
தமிழகம் முழுவதும் பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில், திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திலும் (ஆர்டிஓ) வியாழக்கிழமை திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.பழனி - கொடைக்கானல் சாலையில் அமைந்துள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில், திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி நாகராஜன் மற்றும் காவல் ஆய்வாளர் ரூபா தலைமையிலான 5-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ஒரே நேரத்தில் நடைபெற்று வரும் சோதனையின் ஒரு பகுதியாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. அலுவலகத்தில் உள்ள ஆவணங்கள் மற்றும் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், வழக்கமான புகார்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் திடீர் ஆய்வு நடவடிக்கையாக இது நடைபெற்று வருவதாக தெரிவித்தனர். மேலும், சோதனையின்போது அலுவலகக் கதவுகள் மூடப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறினர்.சோதனை முழுமையாக நிறைவடைந்த பிறகே அதன் முழு விவரங்கள் வெளியாகும் என்றும், ஆய்வின்போது முக்கிய ஆவணங்கள் அல்லது ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டால் அவற்றின் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்படும்என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த திடீர் சோதனையால் வட்டாரப் போக்குவரத்து அலுவலக வளாகத்தில் பரபரப்பு நிலவியது.