ராணிப்பேட்டையில் குடும்பச் சண்டையில் மருமகனுக்கு கத்திவீச்சு: மாமனாரின் வெறிச்செயல்!
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை முத்துக்கடை அடுத்த ஆட்டோ நகர் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக மருமகனை மாமனார் கத்தியால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆட்டோ நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி வள்ளி. இவர்களுக்கு 7 வயது பெண் குழந்தையும், 5 வயது ஆண் குழந்தையும் உள்ளனர். ராஜேஷின் சொந்த ஊர் பனப்பாக்கம் அடுத்த எஸ்கொளத்தூர் என்றாலும், திருமணத்திற்குப் பிறகு மாமனார் வசிக்கும் ஆட்டோ நகரிலேயே குடியேறி கூலி வேலை செய்து வந்துள்ளார். வள்ளி அருகிலுள்ள தனியார் ஷூ நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.இந்நிலையில், நேற்று இரவு சுமார் 7.30 மணியளவில் வள்ளி தனது செல்போனில் நீண்ட நேரமாக ஒருவருடன் பேசிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த ராஜேஷ், "யாருடன் பேசுகிறாய்?" என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் தீவிரமடைந்த நிலையில், ஆத்திரமடைந்த ராஜேஷ் வள்ளியின் செல்போனை பறித்து தரையில் போட்டு உடைத்ததாக கூறப்படுகிறது.செல்போன் உடைக்கப்பட்டதைத் தொடர்ந்து கணவன்-மனைவி இடையேயான தகராறு மேலும் முற்றியது. சத்தம் கேட்டு ஓடிவந்த வள்ளியின் தந்தை குமார், தனது மகளுக்கு ஆதரவாக தகராறில் தலையிட்டார். இதனால் ராஜேஷுக்கும் குமாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.அப்போது ஆத்திரத்தைக் கட்டுப்படுத்த முடியாத குமார், ராஜேஷை தாக்கியதுடன், கத்தியால் அவரது தலையில் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த ராஜேஷ் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். உயிருக்கு அஞ்சிய அவர் அங்கிருந்து தப்பித்து வேலூரில் வசிக்கும் தனது சகோதரி வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் உறவினர்கள் அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.கணவன்-மனைவிக்குள் ஏற்பட்ட குடும்பத் தகராறு வன்முறையாக மாறி கத்திக்குத்து சம்பவத்தில் முடிந்தது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இச்சம்பவம் குறித்து ராணிப்பேட்டை நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.