15 -மீனவர்களுக்கு குளிர்காப்பு பெட்டியுடன் இருசக்கர வாகனங்கள் *ரூ.11.25 லட்சம் மதிப்பில் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

திண்டுக்கல்

Oct 23, 2026 - 18:33
Oct 23, 2026 - 16:58
15 -மீனவர்களுக்கு குளிர்காப்பு பெட்டியுடன் இருசக்கர வாகனங்கள் *ரூ.11.25 லட்சம் மதிப்பில் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 15 மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு குளிர்காப்பு பெட்டி பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் மானிய விலையில் வழங்கப்பட்டன.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி, பயனாளிகளுக்கு வாகனங்களை வழங்கினார். இதில், பொதுப்பிரிவைச் சேர்ந்த 14 மீனவர்களுக்கு 40 சதவீத மானியத்திலும், ஒரு பெண் பயனாளிக்கு 60 சதவீத மானியத்திலும் என மொத்தம் 15 பேருக்கு தலா ரூ.75,000 வீதம், ரூ.11.25 லட்சம் மதிப்பிலான வாகனங்கள் வழங்கப்பட்டன.

இதன் மூலம் மீனவர்கள் பிடிக்கும் மீன்களைப் பொதுமக்களுக்கு தரமான மற்றும் சுகாதாரமான முறையில் விற்பனை செய்து, வருமானத்தை அதிகரித்து வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மதுரை மண்டல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் காசிநாதபாண்டியன், திண்டுக்கல் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் கொளஞ்சிநாதன் உள்ளிட்ட துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.