விளிம்பில் திருமண அலங்கரிப்பாளர்கள் உயிர் பறிக்கும் விபத்துகளும், எட்டாக் கனியாகும் அரசு நிதியுதவியும்!

தமிழ்நாடு

Apr 4, 2026 - 15:51
Apr 4, 2026 - 15:52
 271
விளிம்பில் திருமண அலங்கரிப்பாளர்கள் உயிர் பறிக்கும் விபத்துகளும், எட்டாக் கனியாகும் அரசு நிதியுதவியும்!

கடந்த 5 ஆண்டுகாலமாகத் திருமண மற்றும் கட்சிவிழா அலங்காரப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், தொடர் தீ விபத்துகள் மற்றும் மின் விபத்துகளால் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். உயிரிழப்புகள் மற்றும் உடல் ஊனமுற்ற நிலைக்குத் தள்ளப்பட்ட நிலையிலும், தமிழக அரசிடமிருந்தோ அல்லது அரசியல் கட்சிகளிடமிருந்தோ எவ்விதமான இழப்பீடும் கிடைக்கவில்லை எனத் தமிழ்நாடு திருமண அலங்கரிப்பாளர்கள் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

உயிரைப் பறிக்கும் கட்சி விழாக்கள்:கட்சி விழாக்கள் மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் மின்சாரம் தாக்கியும், உயரமான இடங்களிலிருந்து தவறி விழுந்தும் பலர் மரணமடைந்துள்ளனர். ஆனால், இவர்களுக்கு முறையான காப்பீடு இல்லாததால் அந்தத் தொழிலாளர்களின் குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றன.மேலும் விழாக்காலங்களில் தொழிலாளர்களை மனிதர்களாகக் கூட மதிக்காமல், அடிமைகளைப் போல நடத்தும் அவலநிலை நீடிக்கிறது. முறையான ஓய்வு இன்றி உழைக்க வேண்டியுள்ளதால் பலருக்கு உடல்நலப் பாதிப்பும், மன உளைச்சலும் ஏற்பட்டு  மரணங்கள் நிகழ்கின்றன.

ஊதிய மோசடி: ஒப்பந்தம் செய்தபடி சம்பளத்தை முறையாக வழங்குவதில்லை. உழைப்புக்கேற்ற ஊதியமும் இல்லை, உரிய நேரத்தில் பணமும் கைக்கு வந்து சேருவதில்லை. உடைமைகளுக்கு இழப்பீடு இல்லை, சேதமடைந்த நாற்காலிகள் மற்றும் அலங்காரப் பொருட்களுக்கான தொகையை விழா ஏற்பாட்டாளர்கள் தருவதில்லை. இதனால் இத்தொழிலை நடத்துபவர்கள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றனர்.

அரசியல் கட்சிகளின் போலி வாக்குறுதிகள்:"தேர்தல் நேரத்தில் எங்களை நாடி வரும் அரசியல்வாதிகள், பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்தார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு எங்களைச் சுத்தமாக மறந்துவிட்டார்கள். அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளின்போது இனிமையாகப் பேசி காரியம் சாதிக்கும் நபர்கள், பிறகு எங்களைத் தொடர்புகொள்ள முடியாதபடி தலைமறைவாகி விடுகின்றனர்," என இத்துறையைச் சார்ந்தவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

அமைப்பின் முக்கியக் கோரிக்கைகள்:விபத்தில் பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்த தொழிலாளர் குடும்பங்களுக்குத் தமிழக அரசு உடனடியாகத் தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும். அலங்காரத் தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் விபத்துக் காப்பீடு மற்றும் நல வாரிய உதவிகளை உறுதி செய்ய வேண்டும்.ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களின் ஊதியத்தைப் பாதுகாக்கவும், பணிப் பாதுகாப்பு வழங்கவும் தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும்.உழைப்பைச் சுரண்டிவிட்டு, உயிர் போகும் நிலையில் எங்களைக் கைவிடுவது நியாயமா? இனி வரும் காலங்களில் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், போராட்டங்களை முன்னெடுக்கத் தயங்கமாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார் , தமிழ்நாடு திருமண அலங்கரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ஓம் சக்தி பாலமுருகன்  இதனால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.