ரியல் எஸ்டேட் துறையினருக்கு நலவாரியம் அமைக்க வேண்டும்! தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேசன் பொதுக்குழுவில் வலியுறுத்தல்

Sep 2, 2026 - 22:30
Sep 2, 2026 - 22:37
 8
ரியல் எஸ்டேட் துறையினருக்கு நலவாரியம் அமைக்க வேண்டும்! தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேசன் பொதுக்குழுவில் வலியுறுத்தல்

திருச்சி, செப். 2:

தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேசனின் 2-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் திருச்சியில் உள்ள KMS ஹக்கீம் பிரியாணி குடோன் ஹாலில் நடைபெற்றது.கூட்டத்துக்கு தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேசன் மாநிலத் தலைவர் எம்.கே. கமலக்கண்ணன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் இன்ஜினியர் வி. வீரமணி வரவேற்புரையாற்றினார். மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாளர் மலேசியா ஆர். மணி ஆண்டறிக்கை வாசித்தார். மாநில கூடுதல் செயலாளர் டி. பக்கிரிசாமி, மாநில அவைத்தலைவர் எஸ். அமீருதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.iíiiகூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் வே. கோவிந்தராஜுலு, தொழிலதிபர் ஆர்.வி. ராம்பிரபு, பனானா லீப் எம். மனோகரன், சுமதி பப்ளிகேசன் ஆர்.வி. ஹரிஹரூண், தாசில்தார் பி.ஆர். சர்குணன், டெல்லி கிச்சன் சமூக ஆர்வலர் பி. முருகேசன், எம். விவேகானந்தன், ஜி.வி. டெவலப்பர்ஸ் பிரதிநிதி, பவர்குரூப் ஜனாப் பி. கண்ணையன், அப்துல்காதர், J.P.R. கணேஷ்ராகவன், JBR கன்ஸ்ட்ரக்ஷன், டிவைன் குரூப் திரு. அந்தோணி, ரைட் சிட்டி திரு. ராஜா, கிராண்ட் சிட்டி திரு. ராஜா, பி. பால்ராஜ், ARS குரூப்ஸ் ஏ. ஆனந்த், KK லேண்ட் புரமோட்டர்ஸ் எஸ். சீனிவாசன், நம்நிலம் இன்ஜினியர் எம். அகிலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கட்டிட அனுமதிக்கு சதுர அடிக்கு ரூ.40 வசூலிக்கும் முறையை ரத்து செய்து ரியல் எஸ்டேட் துறையினரின் சுமையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.DTCP மற்றும் RERA தொடர்பான நில விற்பனை அனுமதி கட்டிட அனுமதி பெறுவதில் நிலவும் சிக்கல்களை நீக்கி லஞ்சமற்ற எளிமையான நடைமுறையை உருவாக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.பாமர மக்கள் நிலம் மற்றும் வீடு வாங்கும்போது பத்திரப்பதிவுத் துறையில் ஏற்படும் முறைகேடுகளை தடுத்து வெளிப்படையான மற்றும் நேர்மையான நிர்வாகத்தை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

 கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும்

மணல், செங்கல், டைல்ஸ், சிமெண்டு, கம்பி, ஜல்லி உள்ளிட்ட அத்தியாவசிய கட்டுமானப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தாங்கள் சேமித்த பணத்தைக் கொண்டு வீடு கட்டும் கனவை நிறைவேற்ற முடியாமல் பாதியிலேயே பணிகளை நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே அரசு உடனடியாக தலையிட்டு சந்தையில் நிலவும் செயற்கையான விலை உயர்வை தடுத்து, ஏழை மற்றும் நடுத்தர மக்கள் குறைந்த செலவில் வீடு கட்டும் வகையில் கட்டுமானப் பொருட்களுக்கு நிரந்தர விலை கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

குறைந்த விலையில் அரசு வீட்டுமனை

தமிழகம் முழுவதும் உள்ள அரசு புறம்போக்கு மற்றும் உபரி நிலங்களை முறையாக கண்டறிந்துó அரசுத் துறையே நேரடியாக தரமான அடிப்படை வசதிகளுடன் கூடிய வீட்டுமனைப் பிரிவுகளை (Layouts) உருவாக்க வேண்டும்.அவற்றை ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்யும் உரிய திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

ரியல் எஸ்டேட் துறையினருக்கு நலவாரியம்

ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறையை நம்பி பல லட்சக்கணக்கான புரோமோட்டர்கள், இன்ஜினியர்கள், மேஸ்திரிகள், முகவர்கள் மற்றும் தொழிலாளர்கள் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.ஆனால் இவர்களுக்கு சமூகப் பாதுகாப்பு, மருத்துவக் காப்பீடு மற்றும் ஓய்வூதியத் திட்டங்கள் எதுவும் இல்லை. எனவே, மத்திய அரசு ரியல் எஸ்டேட் துறையினருக்கு தனி நலவாரியம் அமைத்து, விபத்து காப்பீடு, கல்வி உதவித்தொகை, ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகளை சட்டப்பூர்வமாக வழங்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

 புரோக்கர் என்ற பெயரை மாற்ற வேண்டும்

சமூகத்தில் நேர்மையாக உழைத்து தொழில் செய்யும் நில வணிகர்களையும் முகவர்களையும் 'புரோக்கர்' என்று தரக்குறைவாக அழைக்கும் நிலை தொடர்கிறது.எனவே, இன்சூரன்ஸ் முகவர்களைப் போல ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டுள்ளவர்களை அரசு அதிகாரப்பூர்வமாக 'நில முகவர் (Real Estate Agent)' என அங்கீகரித்து அரசாணை வெளியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

 கமிஷன் 3 சதவீதமாக நிர்ணயம்

பல வருட உழைப்பையும் முதலீட்டையும் நம்பி செயல்படும் நில முகவர்களுக்கு உரிய கமிஷன் தொகை சரியான நேரத்தில் கிடைப்பதில் பல்வேறு சிக்கல்கள் மற்றும் ஏமாற்றங்கள் ஏற்படுகின்றன.எனவே ரூ.1 கோடி வரையிலான அனைத்து சொத்து பரிவர்த்தனைகளுக்கும் நில முகவர்களின் கமிஷன் தொகையை சீராக 3 சதவீதமாக முறைப்படுத்த வேண்டும் என பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பத்திரப்பதிவு அலுவலகங்களில் IT குழு

ஆன்லைன் பத்திரப்பதிவு முறை வெளிப்படைத்தன்மையை கொண்டு வந்துள்ள போதிலும், அடிக்கடி ஏற்படும் சர்வர் பழுது, மென்பொருள் சிக்கல்கள் மற்றும் தொழில்நுட்ப தடைகளால் பொதுமக்களும் முகவர்களும் பல மணி நேரம் காத்திருந்து அவதிப்படுகின்றனர்.எனவே, சார்பதிவாளர் அலுவலகங்களில் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகளை உடனுக்குடன் சரிசெய்ய மாவட்டந்தோறும் தகுதி வாய்ந்த IT தொழில்நுட்பக் குழுவை நியமிக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.நில வணிகம் தொடர்பான நடைமுறை சிக்கல்கள் மற்றும் அரசாங்க விதிமுறைகளில் உள்ள முரண்பாடுகளை மாவட்ட அளவில் சுட்டிக்காட்டுவதற்கு முறையான கட்டமைப்பு இல்லை.

எனவே மாவட்ட ஆட்சியர் தலைமையில் அரசுத் துறை அதிகாரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ரியல் எஸ்டேட் சங்கப் பிரதிநிதிகள் அடங்கிய ஆலோசனைக் குழு அமைக்க வேண்டும். இந்தக் குழுவை மாதந்தோறும் கூட்டி, ரியல் எஸ்டேட் துறையின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

 நீர்நிலைகள், அரசு நிலங்களை பாதுகாக்க ஒத்துழைப்பு

சமூக விரோதிகளால் நீர்நிலைகள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்கள் நாளுக்கு நாள் ஆக்கிரமிக்கப்பட்டு வருவது சுற்றுச்சூழலுக்கு பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.அரசு நிலங்கள் மற்றும் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவதை தடுத்து அவற்றை மீட்கும் அரசின் முயற்சிகளுக்கு தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேசன் களத்தில் நின்று உரிய தகவல்களை வழங்கி முழு உறுதுணையாக செயல்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.நடுத்தர குடும்பங்கள் சொந்த வீடு வாங்கச் செல்லும்போது வங்கிகளில் அதிக வட்டி வசூலிக்கப்படுவதால் அவர்களின் பொருளாதாரச் சுமை அதிகரிக்கிறது.எனவே சொந்த வீட்டுமனை வாங்குவதற்கும் வீடு கட்டுவதற்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்கும் சிறப்புத் திட்டத்தை அரசு உடனடியாக கொண்டு வர வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.பத்திரப்பதிவு பட்டா மாறுதல் வில்லங்கச் சான்றிதழ் (EC), லேஅவுட் அனுமதி மற்றும் RERA விதிமுறைகள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமல் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.இதனை தவிர்க்க பத்திரப்பதிவுத் துறையின் வழிகாட்டுதலுடன் மாவட்ட அளவில் 'ரியல் எஸ்டேட் உதவி மையம்' தொடங்கி, பொதுமக்களுக்கு சரியான ஆலோசனைகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.வாரிசுப் பெயர் மாற்றம், பட்டா பிரிவு மற்றும் கூட்டு பட்டா மாறுதல் கோரி தாலுகா அலுவலகங்களில் சமர்ப்பிக்கப்படும் மனுக்கள் மாதக்கணக்கில் தேங்கிக் கிடக்கின்றன.எனவே வாரிசு சொத்து தொடர்பான வருவாய்த்துறைப் பணிகளை விரைந்து முடிக்க தனி Fast-track நடைமுறை கொண்டு வருவதுடன் ஒவ்வொரு பணிக்கும் காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

பழைய பத்திரப் பிழைகளை எளிதில் திருத்த வேண்டும்

பல வருடங்களுக்கு முந்தைய பழைய பத்திரங்களில் எழுத்துப்பிழை, பெயர் மாற்றம், அளவுத் தவறு, சர்வே எண் மாறுதல் போன்ற சிறிய தவறுகளை திருத்துவதற்கான சட்ட மற்றும் நடைமுறைகள் மிகவும் கடினமாக உள்ளன.

இதனால் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதை தவிர்க்க, மாவட்ட பதிவாளர் நிலையிலேயே பழைய பத்திரங்களில் உள்ள சிறிய பிழைகளை சட்டப்படி எளிய முறையில் விரைந்து திருத்திக் கொடுப்பதற்கான புதிய அரசாணையை அரசு பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.போலிப் பத்திரங்கள் தயாரித்தல், போலி கையெழுத்து போடுதல், போலி பவர் ஆஃப் அட்டார்னி தயாரித்தல் மற்றும் ஒரே நிலத்தை பலருக்கு விற்பனை செய்து ஏமாற்றுதல் போன்ற நில மோசடி குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.இத்தகைய நில மோசடி புகார்களை உடனுக்குடன் விசாரித்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க, மாவட்ட அளவில் காவல்துறை கண்காணிப்பாளர் (SP) தலைமையில் 'நில மோசடி தடுப்புச் சிறப்புப் பிரிவு' அமைத்து துரிதமாக செயல்படுத்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.மேற்கண்ட அனைத்து தீர்மானங்களும் பொதுக்குழுவில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.மேலும், சங்கத்தின் மேற்கண்ட கோரிக்கைகளை தமிழக முதலமைச்சரிடம் நேரில் எடுத்துரைக்க, முதலமைச்சரை சந்திக்க நேரம் ஒதுக்கித் தர வேண்டும் என்றும் சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. தங்களது கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என நம்பிக்கை தெரிவித்தனர்.