மதுரை:
இந்தியா - பெனாங்கு இடையே உறவுகளை வலுப்படுத்தும் விமான சேவை. பெனாங்கு மாநாடு மற்றும் கண்காட்சி துறை அமைப்பு (PCEB) சென்னை-பெனாங்கு இடையிலான இன்டிகோவின் நேரடி விமான சேவையின் வெற்றிகரமான துவக்கத்தை கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகிறது. 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கிய இந்த புதிய வழித்தடம், இந்தியாவுக்கும் பெனாங்கிற்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் முக்கிய முன்னேற்றமாகும்.
இந்தியாவையும் பெனாங்கையும் இணைக்கும் ஒட்டுமொத்த முயற்சியின் ஒரு பகுதியாக, சென்னை-பெனாங்கு நேரடி சேவைக்கு கூடுதலாக, மதுரை-சென்னை-பெனாங்கு இணைப்பு சேவையும் இன்டிகோ மூலம் செயல்பட உள்ளது. பயணிகள் ₹12,300 முதல் தொடங்கும் ஒருவழி கட்டணம் மற்றும் 30 கிலோ லக்கேஜ் அனுமதியுடன் பயணிக்கலாம், இதுவணிகப் பயணிகளுக்கு சிறந்த வாய்ப்பாகும்.
2017 முதல், இந்தியாவில் பெனாங்கின் முக்கியத்துவத்தை உயர்த்துவதற்கான முயற்சியில் PCEB தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. பெனாங்கு சாலையோரம் என்ற நிகழ்ச்சியின் அறிமுகத்துடன் தொடங்கிய இந்த முயற்சி, இந்தியாவின் முக்கிய நகரங்களில் பெனாங்கின் தனித்துவமான கலாச்சாரம், தொழில்துறை வாய்ப்புகள் மற்றும் சுற்றுலா அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த முயற்சியின் எட்டாவது பதிப்பாக 2025 நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
சென்னை-பெனாங்கு நேரடி சேவையின் அறிமுகத்துடன், பெனாங்கின் சர்வதேச விமான இணைப்புகள் 19 ஆக உயர்ந்துள்ளது. இதில் பேங்காக், ஹாங்காங், சிங்கப்பூர், ஜகார்த்தா, துபாய், ஷாங்காய், டோகா உள்ளிட்ட முக்கிய நகரங்கள் உள்ளன. இந்த வழித்தடங்கள், பெனாங்கை தெற்காசியாவில் முக்கிய பயண மையமாகவும் வணிகத்திற்கான நடுப்புள்ளியாகவும் மாற்றுகின்றன.
பெனாங்கு மாநாடு மற்றும் கண்காட்சி துறை அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி அஷ்வின் குணசேகரன் கூறுகையில், தனது மகிழ்ச்சியை “சென்னை-பெனாங்கு நேரடி விமான சேவை, எங்கள் நீண்டகால உழைப்பின் வெற்றிகரமான முடிவாகும். இந்த புதிய சேவை இந்திய வணிக நிறுவனங்களுக்கும் பயணிகளுக்கும் அனுகூலமாக இருக்கும். இந்த விமான சேவை பெனாங்கின் பண்பாடு, பாரம்பரியம் மற்றும் வணிக வாய்ப்புகளை அனுபவிக்க விரும்பும் பயணிகளுக்கு மிகுந்த வசதியாக இருக்கும். PCEB இந்த சேவை பெனாங்கின் மாபெரும் வணிக நிகழ்வுகளுக்கான தளத்தை வலுப்படுத்தும் என நம்புகிறது, என்றார்.