அரசு மருத்துவமனை இல்லாததால் முதலுதவி தாமதம்...சுரண்டை பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் பலி
அரசு மருத்துவமனை இல்லாததால் முதலுதவி தாமதம்...சுரண்டை பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் பலி

தென்காசி:
சுரண்டை சிவகுருநாதபுரத்தை சேர்ந்தவர் டி.கே.எம். மாதாள பாண்டியன் (70) இவர் சுரண்டை பேரூராட்சியாக இருந்தபோது 10 ஆண்டுகள் பேரூராட்சி மன்ற தலைவராக பணியாற்றினார்
இவர் கடந்த 30ம் தேதி மாலை 6 மணி அளவில் கடையம் அருகே உள்ள மாதாபுரத்தில் அவருக்கு சொந்தமான செங்கல் சூளையில் பணி முடிந்து சுரண்டை நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது சுரண்டை நகராட்சி பகுதிக்குட்பட்ட பாவூர்சத்திரம் செல்லும் ரோட்டில் தனியார் மதுபான கடை அருகே வந்த போது எதிர்பாராத விதமாக மதுபான கடையில் இருந்து வெளியே வந்த நபர் ஒருவர் ரோட்டை கடந்துள்ளார். அப்போது நிலைதடுமாறி பைக்கிலிருந்து கீழே விழுந்த மாதாள பாண்டியனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த சுரண்டை போலீசார் மற்றும் விவசாயப்பணியில் ஈடு பட்டிருந்த பொது மக்கள் அவரை மீட்டனர் சுரண்டையில் அரசு மருத்துவமனை இல்லாத காரணத்தால் அவருக்கு முதலுதவி சிகிச்சை கூட அளிக்க முடியவில்லை ஆம்புலன்ஸ் வரவும் தாமதமாகியுள்ளது.
தொடர்ந்து தென்காசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மாதாளபாண்டியன் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து சுரண்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் இப்பகுதியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?






