மதுரை:
உசிலம்பட்டி கோட்டாச்சியர் அலுவலகத்திற்கு பணி நிமித்தமாக வரும் வழக்கறிஞர்களை அவமதிப்பு செய்வதாக குற்றம்சாட்டி - கோட்டாச்சியருக்கு எதிராக வழக்கறிஞர்கள் இரண்டாவது நாளாக உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நூற்றாண்டு பழமையான கோட்டாச்சியர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்திற்கு பிறப்பு, இறப்பு சான்றிதழுக்காக வக்காலத்து வழங்க வழக்கறிஞர்கள் அடிக்கடி வருகை தருவது வாடிக்கையாக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள உசிலம்பட்டி கோட்டாச்சியர் சண்முக வடிவேல், பணி நிமித்தமாக கோட்டாச்சியர் அலுவலகம் வரும் வழக்கறிஞர்களை அவமதிப்பு செய்து வருவதாக குற்றம்சாட்டி, கோட்டாச்சியர் அலுவலக வளாகத்திற்குள் முற்றுகையிட வந்த வழக்கறிஞர்கள் சங்கத்தினரை பாதுகாப்பு பணியில் இருந்த உசிலம்பட்டி டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையிலான போலீசார் வழக்கறிஞர்களை தடுத்து நிறுத்த முயன்ற போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் வழக்கறிஞர்களை அவமதிப்பு செய்த கோட்டாட்சியர் சண்முகவடிவேல் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என வழக்கறிஞர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இரண்டாவது நாளாக உசிலம்பட்டி வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் வழக்கறிஞர்கள் உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் உசிலம்பட்டி வருவாய் கோட்டாச்சியர் சண்முக வடிவேல் பிறப்பு இறப்பு சான்றிதழுக்கு இடைத்தரகர்களை வைத்து பணம் வாங்குவதாகவும், வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் பட்டா மாறுதல் மற்றும் பல்வேறு மனுக்களுக்கு கிடைத்தவர்கள் மூலம் லஞ்சம் வாங்குவதாகும் நில அளவையர் பிச்சைமணி இடம், நிலம் உள்ளிட்ட நில அளவைகளுக்கு லஞ்சம் பெற்றுக் கொண்டு பணிகளை செய்து வருவதாகவும் குற்றம் சாட்டி இவர்கள் மீது தமிழக அரசு துறை ரீதியான நடவடிக்கைகள் மற்றும் பணி மாற்றம் செய்ய வேண்டும் என கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் உசிலம்பட்டி டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.