திருச்சியில் உப்பு சத்தியாகிரக இயக்கத்தின் 96-ஆம் ஆண்டு விழா நினைவு யாத்திரை தொடக்கம்!
தமிழக விடுதலைப் போராட்ட வரலாற்றில் மைல்கல்லாகக் கருதப்படும் வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக இயக்கத்தின் 96-ஆம் ஆண்டு தொடக்க விழா திருச்சியில் எழுச்சியுடன் நடைபெற்றது.
வரலாற்றுச் சிறப்புமிக்க தொடக்கம்
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள டி.எஸ்.எஸ். ராஜன் பங்களா மற்றும் உப்பு சத்தியாகிரக நினைவுத்தூண் அருகே நடைபெற்ற இந்த விழாவிற்கு மாநிலத் தலைவர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். அவர் பேசுகையில், "1930-ல் மகாத்மா காந்தியின் தண்டியாத்திரைக்கு இணையாக, தமிழகத்தில் ராஜாஜி தலைமையில் வேதாரண்யம் நோக்கி நடைபயணம் தொடங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க இடம் இது. ஆங்கிலேயரின் உப்பு வரியை எதிர்த்து ஏப்ரல் 13-ல் தொடங்கி ஏப்ரல் 30-ல் நிறைவடைந்த அந்தப் போராட்டத்தின் சாட்சியாக இந்த நினைவுத்தூண் திகழ்கிறது," எனத் தெரிவித்தார்.
அதிகார துஷ்பிரயோகத்தை தடுப்பதே சுதந்திரம்
நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பின் செயலாளர் பேராசிரியர் புஷ்பவனம்சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், "சுதந்திரம் என்பது வெறும் அரசியல் அதிகாரம் மட்டுமல்ல; அதிகார துஷ்பிரயோகம் நடக்கும்போது அதைத் தடுத்து நிறுத்தும் சக்தியை மக்கள் பெறுவதே உண்மையான சுதந்திரம் என்ற காந்தியின் செய்தியை நாம் மறக்கக்கூடாது," என்றார்.
மேலும், திருச்சியில் காந்தி தங்கிய டி.எஸ்.எஸ். ராஜன் பங்களா, புத்தூர் அரசு மருத்துவமனை அருகில் உள்ள காந்தி அஸ்தி மண்டபம் மற்றும் காந்தி உரையாற்றிய தேசிய உயர்நிலைப்பள்ளி மரத்தடி ஆகிய இடங்களை ஒருங்கிணைத்து, முறையான கண்காட்சியகமாக மாற்ற அரசு இதனை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதனால் இளைஞர்களிடையே நாட்டுப்பற்றை வளர்க்க உதவும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு
இந்த விழாவில் தண்ட யாத்திரை குழு தலைவர் சக்தி செல்வகணபதி, மாநில பொதுச் செயலாளர் சுப்பிரமணியன், இளைஞரணி நிர்வாகிகள் குலாம் மைதீன், சிவசண்முகம் மற்றும் மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ் ஆகியோர் இதற்கு முன்னிலை வகித்துச் சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களைப் போற்றிப் பேசினர்.
சமூக செயற்பாட்டாளர்கள் விஜயகுமார், பாலு மற்றும் நிர்வாகிகள் துரைராஜ், தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வின் நிறைவாக மாவட்ட பொதுச் செயலாளர் தர்மராஜ் நன்றி கூறினார். ஆண்டுதோறும் நடைபெறும் இந்த நினைவு யாத்திரை, இன்றும் திருச்சியிலிருந்து வேதாரண்யம் நோக்கி பயணம் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது .
What's Your Reaction?
Like
2
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0