அப்போலோ மருத்துவமனையில் எபிஓ சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை...

அப்போலோ மருத்துவமனையில் எபிஓ சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை...

Jan 8, 2025 - 14:54
 0  38
அப்போலோ மருத்துவமனையில் எபிஓ சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை...
மதுரை:
மதுரை அப்போலோ மருத்துவமனை மருத்துவ துறையில் மற்றுமொரு முக்கிய மைல்கல்லாக மிகவும் அரிதான எபிஓ – இணக்கமற்ற (ABO-Incompatible) சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் தனித்துவமான மருத்துவ சேவையில் தன்னுடைய தலைமைத்துவத்தை மீண்டும் நிரூபித்துள்ளது. தென்தமிழ்நாட்டில் உலகத் தரம் வாய்ந்த மருத்துவ சிகிச்சையைக் கொண்டு சேர்ப்பதில் அப்போலோ மருத்துவமனை என்றும் முன்னிலை வகிப்பதையும் இந்தச் சாதனை எடுத்துக்காட்டுகிறது.

மதுரையை சேர்ந்த 47 வயது மதிக்கத்தக்க ஆண் நீரிழிவு நோய், இரத்த அழுத்தம் மற்றும் நாள்பட்ட சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட நிலையில் மதுரை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீவிர பரிசோதனைக்கு பிறகு அவரின் உடல்நிலையை கருதி அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவ குழு பரிந்துரைத்தது. 'O' இரத்த பிரிவை உடைய அந்த நபருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான சிறுநீரகம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, நீண்ட ஆலோசனைக்கு பிறகு எபிஓ – இணக்கமற்ற (ABO-Incompatible) சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. பொருந்தாத மாற்று இரத்த பிரிவை கொண்ட நபரிடம் இருந்து சிறுநீரகத்தை பெற்று சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படும் முறை தான் இந்த எபிஓ - இணக்கமற்ற சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை. பொதுவாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு குடும்பத்தினரில் உள்ள இணக்கமான இரத்த பிரிவை கொண்ட நபரிடம் இருந்தோ அல்லது மூளை சாவு அடைந்த நபரிடம் இருந்து உறுப்பு தானம் பெற்று அறுவை சிகிச்சை செய்யப்படும். சில நேரங்களில் இது போன்ற வாய்ப்புகள் அமையாதபட்சத்தில் மிகவும் அரிதான எபிஓ - இணக்கமற்ற சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொள்வார்கள். அதன்படி சிறுநீரக பாதிப்பு ஏற்பட்ட ஆணின் (‘O’ Blood Group) 37 வயதான 'B' இரத்த பிரிவு கொண்ட அவரது மனைவியின் சிறுநீரகத்தை பொருத்த முடிவு செய்யப்பட்டது.
இந்த அறுவை சிகிச்சையின் வெற்றியைக் குறித்து மதுரை அப்போலோ மருத்துவமனையின் சிறுநீரகவியல் நிபுணர் டாக்டர் பி. அருண் பிரசாத் கூறியதாவது, “ABO-இணக்கமற்ற சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மிகுந்த சிக்கலான சிகிச்சையாகும், இதில் துல்லியமான திட்டமிடலும் பிரத்யேகமான மருத்துவ செயல்பாடுகளும் தேவைப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சையை மேற்கொள்ள சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நபர் சிறுநீரக மாற்றத்திற்கு முன் இம்முனோசப்ரெஸ்ஸன்ட் எனப்படும் நோயெதிர்ப்பு சக்தியின் அமைப்பை குறைத்து ஆன்டிபாடி நீக்கம் என்கிற பிளாஸ்மாபெரிசிஸ் மற்றும் நோய் எதிர்ப்பு மருந்துகளுடன் கூடிய ஒரு சிறப்பு சிகிச்சை முறையை எதிர்கொண்டார். இதனை தொடர்ந்து டிசம்பர் 18 ஆம் தேதி அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவேறியது. அறுவை சிகிச்சைக்கு பின் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நபரும் நன்கொடையாளருமான அவரது மனைவியும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்ட பிறகு டிசம்பர் 26 ஆம் தேதி இருவரும் நலமுடன் வீடு திரும்பினார்."

செய்தியாளர்கள் சந்திப்பில் பி. நீலகண்ணன் அப்போலோ மருத்துவமனையின் மதுரை மண்டல முதன்மை செயல் அதிகாரி, டாக்டர் கே. பிரவீன் ராஜன், சிறுநீரகவியல் சிகிச்சை நிபுணர் டாக்டர் பி. அருண் பிரசாத் ஆகியோருடன் சிறுநீரகவியல் சிகிச்சை நிபுணர் டாக்டர் சரவணன், சிறுநீரகவியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் ஜே. அருண் குமார், டாக்டர் கே. சங்கர், டாக்டர். அழகப்பன், மூத்த இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வி. ஸ்ரீதர், மயக்கவியல் நிபுணர்கள் டாக்டர் அப்துல் காதர், டாக்டர். சுப்பையா, தீவிர சிகிச்சை பிரிவு நிபுணர் டாக்டர் சி.ஐயப்பன், இரத்த வங்கி நோயியல் நிபுணர் டாக்டர் எம். இந்து, மார்க்கெட்டிங் பொது மேலாளர் கே. மணிகண்டன், நிர்வாக துணை பொது மேலாளர் லாவண்யா மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஒருங்கிணைப்பாளர் பூமுருகன் ஆகியோர் பங்கேற்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow