தலைவிரித்தாடும் கஞ்சா விற்பனை, கேள்விக்குறியாகும் இளைஞர்களின் எதிர்காலம் - அச்சத்தில் பொதுமக்கள்?
லால்குடி
திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த வாளாடி மற்றும் சிறுமருதூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதோடு, இளைஞர்களின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகி உள்ளது.
கடந்த சில மாதங்களாகவே இப்பகுதிகளில் கஞ்சா புழக்கம் பன்மடங்கு அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து இந்த விற்பனை வலைப்பின்னல் செயல்பட்டு வருகிறது. போதைக்கு அடிமையாகும் இளைஞர்கள், சிறு சிறு குற்றச் செயல்களில் ஈடுபடுவதால் கிராமப்புறங்களில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகப் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் கஞ்சா புழக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், அடிமட்ட அளவில் யதார்த்த நிலை வேறாக இருப்பதாகச் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அமைச்சர்கள் மேடைகளில் "கஞ்சா இல்லாத தமிழ்நாடு" என்று முழங்கினாலும், கிராமப்புறங்களில் போதைப்பொருட்களின் தாக்கம் அதிகரித்து வருகிறது.இந்தநிலை பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்:
வாளாடி, சிறுமருதூர் பகுதிகளில் மாலை நேரங்களில் சமூக விரோதிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. கஞ்சா போதையால் இளைஞர்கள் தடம் மாறிச் செல்கின்றனர். இது குறித்து காவல் துறையினருக்குத் தெரிந்தும், அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார்களா என்ற சந்தேகம் எழுகிறது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இதில் நேரடியாகத் தலையிட்டு, இந்த போதைப்பொருள் விற்பனைச் சங்கிலியை உடைக்க வேண்டும்," என வலியுறுத்தியுள்ளனர்.வருங்கால சமுதாயம் போதைக்கு அடிமையாகி அழிவதைத் தடுக்க, காவல்துறை அதிகாரிகள் உடனடியாகத் தனிப்படை அமைத்துத் தீவிர சோதனை நடத்தி, கஞ்சா வியாபாரிகளைக் கைது செய்ய வேண்டும் என்பதே ஒட்டுமொத்தப் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதனை அறிந்து காவல்துறை நடவடிக்கை எடுப்பார்களா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்
What's Your Reaction?
Like
3
Dislike
0
Love
1
Funny
0
Angry
0
Sad
0
Wow
0