தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் கட்டணமில்லா இலவச தரிசனம் செய்ய அனுமதி...

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் கட்டணமில்லா இலவச தரிசனம் செய்ய அனுமதி...

Jan 27, 2025 - 13:06
 0  34
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் கட்டணமில்லா இலவச தரிசனம் செய்ய அனுமதி...
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் கட்டணமில்லா இலவச தரிசனம் செய்ய அனுமதி...

பழனி:

பழனி தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு தரிசனத்திற்கான கட்டணங்கள் ரத்து செய்யப்பட்டு பக்தர்கள் கட்டணமில்லாமல் இலவசமாக தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என 
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். பழனி கோவில் தைப்புசத் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் குறித்த ஒருங்கிணைப்பு கூட்டத்தில் தெரிவித்தார்.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா வருகிற பிப்ரவரி 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் பிப்ரவரி 11ஆம் தேதி நடைபெற உள்ளது. தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பாதையாத்திரையாக வரும் பக்தர்களுக்கு செய்யவேண்டிய ஏற்பாடுகள் குறித்து அனைத்து அரசு துறைகள் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் பொதுப்பணி, வருவாய், நெடுஞ்சாலை, போக்குவரத்து, மின்சாரம், சுகாதாரம், உணவு பாதுகாப்பு துறை, காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை உள்ளிட்ட பல்வேறு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு தேவையான குடிநீர், சாலை, போக்குவரத்து, மின்சாரம், ஓய்விடம், உணவு, கழிப்பறை மற்றும் பல்வேறு  வசதிகள் குறித்தும், இதுவரை செய்துள்ள வசதிகள் குறித்தும் ஆலோசிக்கப் பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சேகர் பாபு தெரிவித்ததாவது : கடந்த ஆண்டு 12 லட்சம் பக்தர்கள் பங்கேற்ற நிலையில் இந்த ஆண்டு அதைவிட அதிகமாக பக்தர்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்போடு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதன்படி பூசத் திருவிழா நடைபெறும் பத்து நாட்களில் நான்கு லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும், அன்னதானம் செய்ய உணவுத்துறை அனுமதி வாங்க வேண்டும் என்று தெரிவித்தது கடந்த ஆண்டு ஏற்பட்ட சில இடர்பாடுகளை முன்வைத்துதான் என்றும், இந்த ஆண்டு அது குறித்து பரிசீலனை செய்து நல்ல முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டு கட்டணம் இல்லாமல் பக்தர்கள் இலவசமாக தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

 பக்தர்கள் வருகையை முன்னிட்டு பழனியில் செயல்படும் தங்கும் விடுதிகள் அதிக கட்டணம் வசூலிப்பதை கண்காணித்து முறைப்படி ஆலோசனை நடத்தி முடிவு செய்ய மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தி உள்ளதாகவும், பக்தர்களின் வருகை பொறுத்து போக்குவரத்து அதிகரிப்பு மற்றும் போக்குவரத்து மாற்றம் குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தைப்பூசத் திருவிழா காலங்களில் பழனி நகரில் இலவச போக்குவரத்து செயல்படுத்துவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். திருப்பரங்குன்றம் கோவிலில் 50 சென்ட் வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமானது என்று தெரிவித்துள்ளது இது குறித்த கேள்விக்கு, 1930 ஆம் ஆண்டு லண்டன் பிரிவியூ கவுன்சில் தெரிவித்துள்ளபடியும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற நீதிமன்ற வழக்குகளின் தீர்ப்பு குறித்தும் நடுநிலையோடு அரசு செயல்பட்டு வருகிறது என்றும், கேள்விகள் கேட்பதும், அதற்கு பதில் சொல்வதும் சுலபம் என்றும், ஆனால் அமைச்சர் என்கிற முறையில் தான் சொல்லக்கூடிய வார்த்தை ஒவ்வொன்றும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என கருதி மத மோதல்களை தவிர்க்கும் வகையிலேயே பேசுவதாகவும், அதே பொதுநல நோக்கத்தோடு ஊடகங்களும் பத்திரிகையாளர்களும் செயல்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப், சார் ஆட்சியர் கிஷன்குமார் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow