8 ஊராட்சிகளை திண்டுக்கல் மாநகராட்சியோடு முழுமையாக இணைக்ககூடாதென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு...
8 ஊராட்சிகளை திண்டுக்கல் மாநகராட்சியோடு முழுமையாக இணைக்ககூடாதென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு...

திண்டுக்கல்:
திண்டுக்கல் நாம்தமிழர் கட்சி சார்பாக 8 ஊராட்சிகளை திண்டுக்கல் மாநகராட்சியோடு முழுமையாக இணைக்ககூடாதென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.
திண்டுக்கல் ஊராட்சி பகுதிகளான: பாலகிருஷ்ணாபுரம், சீலப்பாடி, செட்டிநாயக்கன்பட்டி, பள்ளபட்டி, குரும்பம்பட்டி, அடியனூத்து, தோட்டனூத்து, முள்ளிப்பாடி போன்றவை திண்டுக்கல் மாநகராட்சியோடு இணைக்கப்பட உள்ளது. மேற்படி தமிழக அரசு திமுக அரசினால் சொத்துவரி உயர்த்தப்பட்டு இருக்கும் சூழ்நிலையில், தற்போது இந்த மேற்கண்ட 8 ஊராட்சிகளையும் மாநகராட்சியாக இணைப்பதால் அந்த பகுதியில் வாழும் மக்களின் சொத்துவரி,வீட்டுவரி,குடிநீர் வரி,தொழில் வரி கட்டாயமாக உயரும்.
மாநகராட்சி அறிவிப்பின் மூலம் இன்னும் கூடுதலாக அதிகாரிகள் பணியமர்த்தப்படுவார்களே தவிர மக்களுக்கு எந்த பயனும் இல்லை.அதே போல் பெரும்பாலும் தொழிற்நிறுவனங்கள் ஊராட்சி பகுதிகளில் நிலத்தின் விலை குறைவு என்பதாலும் சொத்துவரி,குடிநீர் வரி, குறைவு என்பதாலும் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்த மாநகராட்சி அறிவிப்பு ஊராட்சி பகுதிகளில் செயல்படும் தொழிற்நிறுவனங்களை கடுமையாக பாதிக்கும். இதனால் உற்பத்தி செய்யப்படும் பொருள்களின் விலை உயர்ந்து அதுவும் மக்களை கடுமையாக பாதிக்கும் சூழ்நிலை உருவாகும். மேற்படி திண்டுக்கல் கிராமப்பகுதிகளில் விவசாயம் சார்ந்த விளைநிலங்கள் மாநகராட்சி அறிவிப்பால் காலிமனையிடங்களாக மாற்றப்பட்டு வருகின்றது. இதனால் அடுத்ததலைமுறை தங்களது உணவுத் தேவைக்காக மற்றவர்களை சார்ந்து இருக்கும் சூழல் உருவாகும்.
முள்ளிப்பாடி அடியனூத்து தோட்டனூத்து போன்ற ஊராட்சிகளை முழுமையாக மாநகராட்சியோடு இணைப்பதனை பரிசீலனை செய்ய வேண்டும். ஏனெனில் இந்த 3 ஊராட்சிகளும் முழுமையாக விவசாயத்தை தொழிலாக சார்ந்து இயங்கக்கூடிய ஊராட்சிகள். ஆனால் அறிவிப்பில் உண்மைக்கு புறம்பாக விவசாயம் செய்யாத பகுதி என்று குறிப்பிடப்பட்டு மாநகராட்சியயோடு இணைக்கப்பட உள்ளது. ஏற்கனவே அடியனூத்து, யாகப்பன்பட்டி, நல்லாம்பட்டி, வேடப்பட்டி, அந்தோணியர் நகர், வாழைக்காய்பட்டி மக்கள் மாநகராட்சியாக இணைக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர்.
மேலும் பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சியில் ஜம்புலியம்பட்டியை மாநகராட்சியோடு இணைக்க அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.மேற்படி தேசிய ஊரக வேலை வாய்ப்புத்திட்டத்தின் மூலம் நூறு நாள் வேலை 8 ஊராட்சி பகுதி மக்களுக்கு மாநகராட்சியாக மாற்றப்படும் காரணத்தினால் நூறு நாள் வேலை திட்டமே இல்லாமல் போகும்.மேற்படி இந்த வேலையை நம்பி நிற்கும் குடும்பங்களுக்கு மிகப்பெரிய பொருளாதார பின்னடைவை ஏற்படுத்தும்.
மாநகராட்சி அறிவிப்பால் பெரிய சாலைகளை அமைத்தல்,பாதாள சாக்கடை அமைத்தல்,கான்கீரிட் சாலை அமைத்தல்,பூங்காக்கள் அமைத்தல்,பாலங்கள் அமைத்தல் போன்ற திட்டங்களால் சாலையின் இருபுறங்களில் இருக்கும் மரங்கள், செடிகள்,கொடிகள், விளைநிலங்கள், அழிக்கப்படும் சூழ்நிலைகளை உருவாக்குகிறது. இதனால் சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிர் பெருக்கம் பாதிப்பினை ஏற்படுத்தும்.
திண்டுக்கல் மாநகராட்சியை பொறுத்தவரை மாநகராட்சி அறிவிப்பு என்பது வெறும் வெற்று வார்த்தையாகவே உள்ளது.இதற்கு முன்பு திண்டுக்கல் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட 48 வார்டுகளில் மாநகராட்சியானதற்கான வளர்ச்சி திட்டத்தின் மூலம் மக்கள் நலன் சார்ந்து எந்த மாற்றமும் ஏற்படவில்லை. மாறாக சொத்துவரி,குடிநீர் வரி,தொழில்வரி,வீட்டு வரி மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மக்களிடம் வரியை பெறுவதற்காக மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாநகராட்சி அறிவிப்பில் மக்கள் நலன்கள் எதுவும் இல்லை. மாறாக அரசின் வருவாய் பெருக்கம் மட்டுமே உள்ளது.
மேற்படி 8 ஊராட்சி பகுதிகள் நகர்ப்புற பகுதியாக விரிவாக்கம் செய்வதால் நகர்ப்புற கழிவுநீரை கொண்டு செல்லும் கழிவுநீர் ஓடைகளாக இருக்குமே ஒழிய ஒருபோதும் மக்களுக்கு பயன்படாது.ஆகவே சமூகம் அவர்கள் மேற்கண்டவற்றை கருத்தில்கொண்டு மாவட்ட ஆட்சியரின் கீழ் நேரடியாக இயங்கும் குழு ஒன்றினை அமைத்து 8 ஊராட்சிகளில் நேரடியாக மக்களிடம் கள ஆய்வு செய்யமாறும் அந்த குழுவின் அறிக்கைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் நாம்தமிழர்கட்சி திண்டுக்கல் தொகுதி.
What's Your Reaction?






