மதுரை:
கோவில் பாப்பாக்குடி, பரவை உள்ளிட்ட மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குள் வரும் பகுதிகளை மாநகராட்சி வரையறைக்குள் இணைக்க கூடாது என மதுரை மாவட்ட ஆட்சியரிடம் முன்னாள் அமைச்சரும் தொகுதி எம்.எல்.ஏவுமான செல்லூர் கே.ராஜூ மனு அளித்தார் அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
மதுரையில் 20க்கும் மேற்பட்ட ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைப்பதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. மாநகராட்சியுடன் பேரூராட்சி, ஊராட்சியை இணைக்க கூடாது என வலியுறுத்தினோம். அப்பகுதி மக்களுக்கு 100 நாட்கள் வேலை கிடைக்காது. பேரூராட்சி, ஊராட்சிகள் மாநகராட்சியுடன் இணைந்தால் வரி உயருமே தவிர வசதிகள் கிடைக்காது. பேரூராட்சி, ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மக்களின் விருப்பத்தின் பேரில் தான் ஊரக பகுதிகளை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும்.
மதுரை பரவை பேரூராட்சி, கோவில் பாப்பாகுடி ஊராட்சியை இணைக்க கூடாது என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து உள்ளேன்.மாநகராட்சியில் ஏற்கனவே உள்ள பகுதிகளுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கொடுக்க முடியவில்லை, புதிதாக பகுதிகள் இணைக்கப்பட்டால் எப்படி அடிப்படை வசதிகளை செய்து தருவார்கள். மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் பல்வேறு பகுதிகளில் மக்கள் போராடி வருகிறார்கள். அதனால் அந்த பகுதிகளை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டாம் என ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்துள்ளேன்.
மாநகராட்சியுடன் இணைத்தால் தான் மக்களுக்கு வளர்ச்சி கிடைக்கும் என்ற கேள்விக்கு.?
மாநகராட்சி பகுதிகளுக்கே ஒரு திட்டமும் செய்யவில்லை, அப்புறம் எப்படி புதிய பகுதிகளுக்கு வளர்ச்சி கிடைக்கும் என்றார். மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கு ஒன்றுமே செய்யவில்லை, இணைக்கப்பட உள்ள பகுதிகளுக்கு என்ன வளர்ச்சி திட்டம் செய்ய போகிறோம் என தமிழ்நாடு அரசு கூற வேண்டும் என்றார்.